ஐசிசி தலைவராக ஜெய் ஷா மீண்டும் போட்டியின்றி தேர்வு

0
14

 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று முடிந்த ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இயக்குநர்களின் முன்மொழிவைத் தொடர்ந்து இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றார் ஜெய் ஷா. ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், பிசிசிஐ கௌரவச் செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தான் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜெய் ஷா, ஐசிசி நிர்வாகக் குழுவும் இயக்குநர்களும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது புதிய ரசிகர்களையும் வீரர்களையும் உருவாக்க ஒரு அரிய வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய் ஷாவின் மறுநியமனத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்சன், ஐசிசி துணைத் தலைவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவருமான தவங்வா முகுஹ்லானி, நியூசிலாந்து கிரிக்கெட் இயக்குநர் ரோஜர் ட்வோஸ் மற்றும் ஐசிசி அசோசியேட் உறுப்பினர் தலைவர் குருமூர்த்தி பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here