இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ஜாஸ்மின் பவுலினி

0
84

இத்தாலின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 13-ம் நிலை வீராங்கனயைன ரஷ்யாவின் டயானா ஸ்னைடருடன் மோதினார்.

இதில் பவுலினி 6-7 (1-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 11 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பவுலினி பெற்றார். இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு சாரா எரானி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 2-6, 6-4, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸிடம் தோல்வி அடைந்தார்.

ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவையும், 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் பில்ஸையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர்.

10-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மேத்வதேவ் 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டியிடம் தோல்வி அடைந்தார். 5-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜேக் டிராப்பர் 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கோரன்டின் மவுட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here