எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள் விசாரணைக்குழு நேற்று ஆய்வை தொடங்கியது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது அரசு இல்லத்தில் உள்ள பொருட்கள் வைக்கும் அறையில் கடந்த 14-ம் தேதி இரவு தீப்பிடித்தது. அங்கு எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விஷயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்துக்கும், தனது குடும்பத்தினருக்கும் சம்பந்தம் இல்லை, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த சதி என நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தவாலியா, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல்நாகு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு டெல்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டுக்கு நேற்று சென்று தனது ஆய்வு மற்றும் விசாரணையை தொடங்கியது. அங்கு சுமார் 35 நிமிடங்கள் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.