இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து பேசினர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் பகலிரவாக நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக 2 நாட்கள் கொண்ட பகலிரவு பறிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் நாளை (30-ம் தேதி) கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி கான்பெர்ரா சென்ற இந்திய அணி வீரர்கள் நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து பேசினர். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா தனது அணி வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
தொடர்ந்து ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சுருக்கமாக உரையாற்றினார். அவர், தனது உரையில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் வளமான வரலாற்றை எடுத்துரைத்தார்.
இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் அந்தோனி அல்பனீஸ்,“இந்த வாரம் பிரதமர் அணிக்கு மனுகா ஓவல் ஆடுகளத்தில் சிறப்பான இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. நான் பிரதமர் மோடியிடம் சொன்னதுபோல ஆஸ்திரேலிய அணி தனது வேலையை செய்து முடிக்குமென நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அந்தோனி அல்பனீஸ் பதிவுக்கு எனது எக்ஸ்வலைதள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். அதில்,“இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு சிறந்த தொடக்கத்தை அமைத்துள்ளது. 1.4 பில்லியன் இந்தியர்கள் மென் இன் ப்ளூவுக்கு வலுவாக வேரூன்றி உள்ளனர். இனி வரும் போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.