இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் இன்று (ஜனவரி 14) இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் பரிசுத்தொகை 950,000 அமெரிக்க டாலர் ஆகும். சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 11,000 புள்ளிகள் வழங்கப்படும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி சீன தைபேவின் சென் செங் குவான், சு யின்-ஹுய் ஜோடியுடன் மோதுகிறது. மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் அரிசா இக்ராஷி, அயாகோ சகுராமோட்டோ ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றவரும் 14-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சுங் ஷுவோ யுன்னுடன் மோதுகிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 14-வது இடத்தில் உள்ள மலேசியாவின் மான் வெய் சோங், கை வுன் டி ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் 41-வது இடத்தில் உள்ள இந்தியாபின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 20-வது இடத்தில் உள்ள சீனாவின் வெங் ஹொங் யாங்குடன் மோதுகிறார்.