உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் உதவ இந்தியா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலின் போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், தற்போதைய போரின் கள நிலவரங்கள் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே போருக்குத் தீர்வு காண முடியும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி: “அதிபர் ஜெலென்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இருதரப்பு கூட்டுறவை மதிப்பாய்வு செய்ததுடன், இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டோம்.
அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகள் மற்றும் மனிதாபிமான அம்சங்கள் குறித்த தமது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி தெரிவித்தேன். அமைதியான தீர்வை எட்டுவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
