கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பான் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா 341 பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது. இதில் 169 தங்கம், 89 வெள்ளி, 83 வெண்கல பதக்கங்கள் அடங்கும். போட்டியை நடத்திய ஜப்பான் 83 தங்கம், 95 வெள்ளி, 91 வெண்கலத்துடன் 269 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. தென்கொரியா 39 தங்கம், 43 வெள்ளி, 68 வெண்கலம் என 150 பதக்கங்களைக் கைப்பற்றி 3-வது இடத்தை பிடித்தது. இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்களை வேட்டையாடி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
ஹாங்சோவில் கடந்த 2023-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா 28 தங்கப் பதக்கங்களுடன் 106 பதக்கங்களைக் கைப்பற்றி 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தது. ஆனால் தற்போது அதை விட 21 பதக்கங்களை குறைவாகப் பெற்றுள்ளது.
கலைநிகழ்ச்சிகள், சாகசங்கள்
கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய போட்டிகள், நேற்று முன்தினம் நிறைவுற்றன. இந்தப் போட்டியில் சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா 3 பதக்கம் வென்று அசத்தினார். நேற்றைய நிறைவு விழாவின்போது இந்திய அணியின் சார்பில் தேசியக் கொடியை நீரு தண்டா அணிவகுப்பில் ஏந்திச் சென்று பெருமை சேர்த்தார்.
தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று அசத்தல் சாதனை புரிந்தார். அணிகள் அணிவகுப்புக்குப் பின்னர் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் கோலாகலமாக அரங்கேறின.
மைதானத்தில் லேசர் காட்சிகள் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தோஹாவில் அடுத்த போட்டி
அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2030-ம் ஆண்டு கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற உள்ளன. இதையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான கொடியை, ஆசிய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சேக் ஜோன் பின் ஹமது அல்தானி, கத்தார் நாட்டு அதிகாரிகளிடம் வழங்கினார்.














