மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்ஸாபரா மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும். எனவே தொடரைக் கைப்பற்றுவதில் ஷுப்மன் கில் தலைமையிலான அணி தீவிரம் காட்டக்கூடும்.
பேட்டிங்கில் ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் முதல் போட்டியில் சதம் விளாசினர். இவர்களிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோரிடமிருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய ஜஸ்டின் கிரீவ்ஸ், அரை சதம் அடித்த ஜாண் கேம்பல், அமிர் ஜாங்கூ ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.














