எப்போது வேண்டுமானாலும் 3 சிக்ஸர், பவுண்டரிகளை என்னால் விளாச முடியும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 10 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
தனது பேட்டிங் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போட்டியின் தொடக்கத்தில் நான் மெதுவாகவே விளையாடினேன். அவசரம் காட்டுவதை விட, எனது இன்னிங்ஸின் வேகத்தை முறைப்படுத்துவதிலும், ஆடுகளத்தின் தன்மையை உற்றுநோக்குவதிலும், மறுமுனையில் ஆடும் தனது சக வீரருக்குத் துணையாக நீண்ட நேரம் பேட்டிங் செய்வதிலும் என்னுடைய கவனம் இருந்தது அதுதான் எனது மனநிலையாகவும் இருந்தது.
எப்போது வேண்டுமானாலும் இரண்டு அல்லது மூன்று பவுண்டரிகள் அல்லது சிக்ஸர்களை என்னால் விளாச முடியும் என்று எனக்குத் தெரியும். எனவே, நான் சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு, அதிக அவசரம் காட்டாமல், ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல முயற்சி செய்தேன். நாங்கள் பந்துவீசியபோது நான் களத்துக்கு வெளியே அமர்ந்திருந்தேன்.
அப்போது ஆடுகளம் பேட்டிங்குக்கு மிகவும் சாதகமாக இருப்பது தெரிந்தது. அதைக் கண்டதும், இன்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நான் அதிக அவசரம் காட்டக்கூடாது. சற்றுநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் நான் பேட்டிங் செய்தால், அது மறுமுனையில் ஆடும் பேட்ஸ்மேனுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன்.
அதைத்தான் நான் களத்தில் செயல்படுத்தினேன். இந்த வெற்றிக்கு ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் கடினமாக உழைத்தனர். அனைவரும் ஆட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு முழுமையான திறனை களத்தில் வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
