அட்லாண்ட்டா ஸ்டேடியத்தில் நடைபெற்ற அர்ஜெண்டினா – எகிப்து ரவுண்ட்-16 ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்திருக்கலாம்.
ஆனால், இந்த உலகக் கோப்பையின் ஆகப்பெரும் களங்கமான வீடியோ அசிஸ்ட் ரிவ்யூ மகா மோசமாகிக் கொண்டே வருகிறது, பல அணிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இப்போது எகிப்து உண்மையில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டிய அணி.
நடந்தது என்ன?
ஆட்டத்தின் 62-வது நிமிடம். ரெஃப்ரீ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்சுவா லெடெக்சியே. இந்த நடுவரை ஏற்கெனவே தங்கள் ஆட்டத்தில் வேண்டாம் என்று எகிப்து மறுத்தது ஒருபுறம் இருக்கட்டும். வி.ஏ.ஆர். ரிவ்யூ நடுவர் ஜெரோம் பிசார்ட்.
எகிப்தின் முன்கள தாக்குதல் வீரர் முஸ்தபா ஜீகோ அருமையான கோலை அடித்து எகிப்துக்கு 2-0 என்று முன்னிலை கொடுத்து விட்டார் என்றே கொண்டாட்டங்கள் நிகழ, திடீரென ரெஃப்ரீக்கு வீடியோ அசிஸ்ட்டிடமிருந்து ஃபவுல் நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. விஏஆர் தலையீட்டினால் இந்த உலகக் கோப்பையின் அற்புத கோல் மறுக்கப்பட்டது. எங்கே ஃபவுல் நிகழ்ந்தது என்பதுதான் வேடிக்கை.
கோல் அடிப்பதற்கு 30 விநாடிகளுக்கும் மேல் முன்னதாக சாலாவின் துல்லிய பாஸை இடது புறத்தில் பெற்ற ஹசன் அற்புதமாக பந்தை எடுத்து வர, ஜிகோவின் கோலாக அது மாறியது, ஆனால் 30 விநாடிகளுக்கும் மேல் முன்னதாக எகிப்து வீரர் அட்டியா, அர்ஜெண்டின வீரர் லிசாண்ட்ரோ மார்ட்டினேசின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவர் ஷூ மேல் தன் காலை வைத்ததாக ஃபவுல் என்று தீர்ப்பளிக்கப்பட, பிரான்ஸ் ரெஃப்ரீ கோலை மறுத்தார்.
அதை ஃபவுல் என்றே ஏற்றுக் கொண்டாலும் கோல் விழுவதற்கு எத்தனை விநாடிகள் முன்னால் அது நடந்தது, கோலில் அதன் தாக்கம் என்ன என்பதெல்லாம் பரிசீலிக்கப்படவே இல்லை. ஒரு ஃபவுல் அநியாயமான கோலுக்குக் காரணமாக இருந்தால் மறுக்கப்படுவதில் நியாயம் உள்ளது. கோலுக்கும் அதற்கும் சம்பந்தமில்லாத ஒன்றுக்கு கோலை மறுக்கலாமா என்பதே இப்போது பெரும் விவாதமாகக் கிளம்பியுள்ளது.
கத்தார் உலகக் கோப்பையிலிருந்தே அர்ஜெண்டினா அணி மெஸ்ஸி இருப்பதாலோ என்னவோ சில பல நியாயமற்ற சாதக பலன்களை அனுபவித்து வருகிறது.
இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஃபவுல் செய்ததாக பெனால்டி கிக் அர்ஜெண்டினாவுக்கு வழங்கப்பட்டது, ஆனால் அதே போட்டியில் மெஸ்ஸி எதிரணி வீரரின் சட்டையைப் பிடித்து இழுத்து பின்னாலிருந்து டேக்கிள் செய்தார், தெளிவாக சிகப்பு அட்டைக் காட்டப்பட வேண்டியது, ஆனால் பாரபட்சம் தலைதூக்கியது.
எகிப்துக்கு எதிராகவும் ஒரு பெனால்டி கிக் அர்ஜெண்டினாவுக்கு வழங்கப்பட்டது, அஃப்கோர்ஸ் அதை மெஸ்ஸி சொதப்பலாக கோட்டை விட்டார் என்பது வேறு கதை.
சரி! எகிப்து முறையீடு செய்த இரண்டு அர்ஜெண்டீன ஃபவுல் ஏன் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது?
இதில் முதலாம் ஃபவுல் இரண்டாம் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் நடந்தது. இரண்டு அர்ஜெண்டின ஃபவுலுமே பெனால்டி பகுதிக்குள் நடந்தது. ஏன் எகிப்துக்கு அதன் சாதகப் பலன்கள் வழங்கப்படவில்லை?
இந்த ஃபவுலில் அர்ஜெண்டின வீரர் மாக்ஸ் அலிஸ்டர், எகிப்து வீரர் ஹம்தி ஃபாத்தியை பிடித்து இழுத்தார், அவர் கீழேயே விழுந்து விட்டார். அதுவும் பெனால்டி பகுதியில். ஆனால் இப்போது வீடியோ அசிஸ்ட் நடுவர் தலையிடவில்லை. ரெஃப்ரீக்கு அறிவுறுத்தவில்லை. இது ஏன்?
இதை விடவும் நெருக்கமானது ஆட்டம் முடியும் தறுவாயில் எகிப்து நட்சத்திர வீரர் சலா அர்ஜெண்டின பாக்சிற்குள் தாக்குதல் நடத்த அர்ஜெண்டினாவின் ஜூலியன் அல்வரேஸ், சலாவைக் கால்தட்டு போட்டார். இப்போதும் இது ஃபவுல் என்று தீர்ப்பளிக்கவில்லை. ஆட்டம் எந்த ஒரு இடையூறும் சலனமுமின்றி தொடர்ந்தது. ஆனால் எகிப்து கடுமையாக முறையிட்ட பிறகு செக் செய்து தவறு நிகழவில்லை என்று சர்டிபிகேட் அர்ஜெண்டினாவுக்குச் சாதகமாக வழங்கப்பட்டது.
உண்மையில் வி.ஏஆர் ரிவ்யூ நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் எகிப்துக்கு மறுத்தது போல் அர்ஜெண்டினாவின் இரண்டு கோல்களை மறுத்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஃபவுலில் எகிப்துக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
