பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில், நார்வே அணியுடன் மோதியது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் நார்வே அணியின் வீரர் மார்ட்டின் ஓடேகார்ட் வழங்கிய அற்புதமான பாஸை ஜூலியன் ரையர்சன் கோலாக மாற்றினார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.
14-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. புரூனோ கைமரேஸ் மற்றும் கேப்ரியல் மார்ட்டினெல்லி ஆகியோர் இணைந்து பந்தை கடத்தினார்கள். பின்னர் மார்ட்டினெல்லி பெனால்டி பாக்ஸின் இடது பக்கத்தில் இருந்த குன்ஹாவை நோக்கி தட்டிவிட்டார். குன்ஹா பந்தை எடுப்பதற்குள், அவரை நார்வே அணியின் கிறிஸ்டோபர் அஜர் கீழே தள்ளிவிட்டார். இதனால் விஏஆர் பரிசீலனைக்கு பிறகு பிரேசில் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதில் பிரேசில் வீரர் புரூனோ கைமரேஸ் அடித்த பந்தை நார்வே அணியின் கோல்கீப்பர் ஆர்ஜன் நைலான்ட் இடது பக்கம் பாய்ந்து அற்புதமாக தடுத்தார். இதனால் பிரேசில் அணியும், அந்நாட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கின. பிரேசில் அணியின் வினிஷியஸ் ஜூனியர், கேப்ரியல் மார்ட்டினெல்லியின் கோல் அடிக்கும் முயற்சிகளை நார்வே கோல்கீப்பர் ஆர்ஜன் நைலான்ட் தடுத்தார்.
மறுமுனையில் நார்வே அணியின் வீரர் ஓடேகார்டின் முயற்சியை பிரேசில் கோல்கீப்பர் அலிசன் தடுத்தார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 79-வது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து நார்வே அணியின் வீரர் ஷெல்டாரப் கொடுத்த கிராஸை துள்ளியவாறு தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ளினார் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட். இதனால் நார்வே அணி 1-0 என முன்னிலைபெற்றது.
அடுத்த 11-வது நிமிடத்தில் நார்வே அணி 2-வது கோலை அடித்தது. 90-வது நிமிடத்தில் ஷெல்டாரப்பின் பாஸை பெற்று பாக்ஸின் விளிம்பிலிருந்து தாழ்வான ஷாட்டால் பந்தை வலைக்குள் திணித்தார் எர்லிங் ஹாலண்ட். இதனால் நார்வே 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+10-வது நிமிடத்தில் நார்வே அணியின் பதிலி வீரர் ஆஸ்டிகார்ட், பிரேசில் அணியின் வீரர் கஸ்மிரோவின் மீது முழங்கையால் இடித்தார்.
இதனால் பிரேசில் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரரான நெய்மர் கோல் அடித்தார். எனினும் இறுதிக் கட்ட நிமிடங்களில் பிரேசில் அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியாமல் போனது. முடிவில் நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதற்கு முன்னர் 3 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி உள்ள நார்வே அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றை தாண்டியது இல்லை. வரும் 11-ம் தேதி நடைபெறும் கால் இறுதி சுற்றில் நார்வே அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
14-ல் 27: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நார்வே அணியின் நட்சத்திரமான எர்லிங் ஹாலண்ட் 2 கோல்கள் அடித்தார். சர்வதேச கால்பந்து அரங்கில் எர்லிங் ஹாலண்ட் தொடர்ச்சியாக 14-வது ஆட்டங்களில் 27 கோல்களை அடித்து அசத்தி உள்ளார். ஒட்டுமொத்தமாக அவர், 54 போட்டிகளில் 62 கோல்கள் அடித்துள்ளார்.
‘கடவுள் கொடுத்த பரிசு’
பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் கூறும்போது, “இந்த வெற்றியின் மூலம் நார்வேயின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை எழுதலாம். ஒவ்வொருவரும் இந்தத் தருணத்தைக் கொண்டாட வேண்டும். இது உண்மையிலேயே அசாத்தியமான நாள். நார்வே நாட்டின் வரலாற்றிலேயே மிக விசித்திரமான, மறக்க முடியாத நாட்களில் இதுவும் ஒன்று. பந்து கோல் வலைக்குள் சென்றது, உண்மையில் கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு போலத் தோன்றியது” என்றார்.
1990-ம் ஆண்டுக்குப் பிறகு
உலகக் கால்பந்தின் வல்லரசாக திகழும் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, உலகக் கோப்பைத் தொடர்களில் தொடர்ந்து 8 முறை (1994 முதல் 2022 வரை) கால் இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்து இருந்தது. இந்த சாதனை தற்போது நார்வேயால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜெண்டினாவிடம் 1-0 என தோற்று வெளியேறியிருந்தது. அதன்பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விரைவாக வெளியேறி உள்ளது.
7-வது தோல்வி
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுகளில் ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக பிரேசில் சந்திக்கும் தொடர்ச்சியான 7-வது தோல்வி இதுவாகும். 2002-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தியதற்குப் பிறகு, பிரேசில் அணியால் நாக்-அவுட் சுற்றில் எந்தவொரு ஐரோப்பிய அணியையும் வெல்ல முடியவில்லை.
கோட்டை விட்ட 2-வது வீரர்: 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரேசில் வீரர் ஜிகோ பெனால்டி கிக்கில் கோல் அடிக்கத் தவறியிருந்தார். இதன் பின்னர் தற்போது நார்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் கோல் அடிக்கும் பொன்னான வாய்ப்பை புரூனோ கைமரேஸ் கோட்டைவிட்டார். இது ஒருபுறம் இருக்க நட்சத்திர வீரரான வினிசியஸ் ஜூனியருக்கு பதிலாக, கைமரேஸை பெனால்டி கிக்கில் பயன்படுத்தியது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
சாமர்த்தியமான நகர்வு
பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-வது பாதியில் நார்வே அணியின் பயிற்சியாளரான ஸ்டேல் சோல்பாக்கன் ஆண்ட்ரியாஸ் ஷெல்டாரப், ஆஸ்கர் பாப் ஆகியோரை பதிலி வீரர்களாக உள்ளே கொண்டுவந்தார். இது அணிக்கு பெரிய பலனை கொடுத்தது. ஷெல்டாரப் கொடுத்த 2 பாஸ்களையே எர்லிங் ஹாலண்ட் கோல்களாக மாற்றியிருந்தார்.
