ஐபிஎல் லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
அந்த அணி இதுவரை ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. வலுவான டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் அந்த அணி வீழ்ந்துள்ளது.
கடந்த 17-ம் தேதி மும்பை அணியுடனான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வி கண்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பையை வீழ்த்தி, பதிலடு கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் இன்றைய ஆட்டத்தில் வெளிப்படக்கூடும். அதேபோல் இஷான் கிஷன், நித்திஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிக்கெட் வர்மா, கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோரிடமிருந்தும் உயர்மட்ட செயல்திறன் வெளிப்படும்பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி எளிதாகலாம்.
அதேபோல் பவுலிங்கில் பாட் கம்மின்ஸ், இஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி, ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். இவர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
அதேநேரத்தில், தொடர்ச்சியாக தோல்விகள் பெற்று வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசியாக தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக சிஎஸ்கே அணியுடன் விளையாடிய லீக் ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்து ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். அதேபோல் ரியான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரும் அதிரடி காட்டி வருகின்றனர்.
இவர்கள் எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்கக் காத்திருக்கின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியா, நமன்திர், வில் ஜேக்ஸ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
பவுலிங்கில் அந்த அணி ஜஸ்பிரீத் பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், ஹர்திக் பாண்டியா, சான்ட்னர் என பலம் மிகுந்து காணப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு குழு, நிச்சயம் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.