ஈரோட்டில் குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது!

0
32

ஈரோடு: நசியனூர் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரது மரணத்தை இயற்கை மரணமாகக் காட்டி உடலை அவசரமாக அடக்கம் செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் தகராறு

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. நாகராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு நாகராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அடித்துக் கொலை

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நாகராஜ், ராஜேஸ்வரியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி, வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் உயிரிழந்தார்.

இயற்கை மரணம் என நாடகமாட முயற்சி

மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொலையை மறைக்கும் நோக்கில் நாகராஜ் அவரது மரணத்தை இயற்கை மரணமாகக் காட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் உடலை அவசரமாக அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

ராஜேஸ்வரியின் திடீர் மரணமும், உடலை அவசரமாக அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளும் அப்பகுதி மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. இதுகுறித்து அவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை: கணவன் கைது

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நாகராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், மனைவியைத் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத் தகராறில் மனைவி உயிரிழந்த சம்பவம் கொங்கம்பாளையம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here