கன்னியாகுமரி: அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வரம்பு தொடர்பாக அரசு வழிகாட்டு வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை தமிழக அரசு வெளியிடுவது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்திலேயே முன்னோடி மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் கையில் பணம் வைத்திருப்பது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரான பிரதாப்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவினை தாக்கல் செய்திருந்தவர் திருநெல்வேலியில் சார்வதி பதிவாளராக பணியாற்றிய கலா என்பவர்.
அவர் பணியின் போது 45 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் கலா.
இந்த மனுவினை விசாரித்தார் நீதிபதி புகழேந்தி. அப்போது மனுதாரர் தரப்பில் சொந்த செலவுக்காக வைக்கப்பட்டிருந்த பணம் என சொல்லப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் பதிவுத் துறையின் தலைமை பதிவாளர் வெளியிட்டு அறிக்கையின்படி பணியில் இருக்கும் பதிவுத்துறை ஊழியர்கள் கையில் வைத்திருக்கக்கூடிய பண வரம்பு குறித்தும் பதிவேடுகளை பராமரிப்பது குறித்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தங்களிடம் வைத்திருக்கக்கூடிய ரொக்க பணத்திற்கு பொதுவான வரம்பை நிர்ணயித்து ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மனிதவள மேலாண்மை துறையின் முதன்மைச் செயலரின் கருத்துக்களை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது எனவும், குறிப்பிட்ட அளவு பண வரம்பை நிர்ணயித்து அரசு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்திலேயே முன்னோடி மாவட்டமாக அரசு ஊழியர்கள் பணம் வைத்திருப்ப தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆன பிரதாப்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் பண விவரத்தை “Personal Cash Register” என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இந்த ரொக்கப் பதிவேடானது. தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று. சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இந்தப் பதிவேட்டைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இந்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.















