‘எஸ்டிஆர் 49′-ல் சந்தானம் இணைந்தது எப்படி? – நடிகர் சிலம்பரசன் விளக்கம்

0
532

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ . பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யாவழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: “ஒவ்வொரு படத்துக்கும் அதிகம் மெனக்கெட்டு ரசிகர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாகச் சந்தானத்தின் உடல் மொழிநன்றாக இருக்கிறது.

சந்தானம் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இந்தத் தருணத்தில் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர், நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் அதைப் புறக்கணித்து விடுவார்கள். அது முக்கியமில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். பழசை மறக்காமல் இருப்பதுதான் சந்தானத்தின் இயல்பு. இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும்.

‘எஸ்டிஆர் 49′-ல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். அது ஏன் என்பதைச் சொல்லவிரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. பெரும்பாலான படங்கள் ஆக்‌ஷனாக இருக்கின்றன. சமீபத்தில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. அதுபோன்ற சந்தோஷமான படங்களும் அதிகம் வரவேண்டும். அப்படியான படங்கள் வரவேண்டுமானால் சந்தானம் ஹீரோவாக நடிப்பதோடு, என் போன்ற, ஆர்யா போன்ற, அவருக்குப் பிடித்த இயக்குநர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘எஸ்டிஆர் 49’-ல் அவர் இணைந்துள்ளார். இனி அவரை அதிகப் படங்களில் பார்ப்பீர்கள். இவ்வாறு சிலம்பரசன் கூறினார். ஆர்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here