Home தேசிய செய்திகள் கர்நாடகாவில் 2-வது முறையாக முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்

கர்நாடகாவில் 2-வது முறையாக முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்

0

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவை இரண்டாவது முறையாக அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் திருப்பி அனுப்பி உள்ளார்.

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2 பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய‌ப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பாஜக எம்எல்ஏக்களின் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த ஆளுநர், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி கடந்த ஏப்ரலில் மசோதாவை திருப்பி அனுப்பினார். இதுகுறித்து வழிகாட்டுதல்களை வழங்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பரிசீலனைக்கும் அனுப்பினார்.

இதையடுத்து கர்நாடக சட்டத்துறை சார்பில் அந்த மசோதா மீண்டும் திருத்தப்பட்டு, மே முதல் வாரத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை 2-வது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் கூறும்போது ”அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு முரணாக இருக்கிறது. பிரிவு 2-ல் இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் பல சாதிகள் இருப்பினும், முஸ்லிம்களுக்காக தனியாக 2 பி பிரிவு உருவாக்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, மதத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவராக கருத முடியுமா என கேள்வியும் எழுகிறது. இது சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இந்த திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் சிக்கல்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பியதால் முதல்வர் சித்தராமையா அதிருப்தி அடைந்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version