கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கேஸ் டேங்கர் லாரி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த டேங்கரில் 18 டன் எல்பிஜி கேஸ் இருந்தது. கோவை அவிநாசி சாலையில் உள்ள பழைய அண்ணா மேம்பாலத்தின் மீது இந்த லாரி இன்று அதிகாலை வந்து உப்பிலிபாளையம் நோக்கி செல்லும் வழித்தடத்தில் திரும்ப முயன்றது. அப்பொழுது இந்த லாரியில் இருந்த இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டு, பின்னால் இருந்த எரிவாயு டேங்கர் கீழே உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து அதிலிருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்புத்துறையினர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மிக கவனமாக நேர்த்தியாக வாகனத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.
மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்துள்ளதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை போக்குவரத்து போலீஸார் ஒருங்கிணைத்து மாற்றுப் பாதைகளில் வாகனங்களைத் திருப்பிவிடுகின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை: சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வாயுக் கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனத்தை எவ்வாறு மீட்பது அல்லது அந்த வாகனத்தில் உள்ள எரிவாயுவை வேறு சிலிண்டர் கொண்டு வந்து அதில் மாற்றிவிடலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. எரிவாயுவை மாற்றுவதற்கான நடவடிக்கை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விபத்து பகுதியைச் சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் மின் தடை செய்யப்பட்டது. மேலும் இதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.