முதல்வர் விஜய்யை ஃபோர்டு நிறுவனத்தினர் சந்தித்தனர். அவர்களிடம் மறைமலைநகரில் உற்பத்தி மற்றும் விரிவாக்கத்தை விரைவில் தொடங்கும்படி முதல்வர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனம், தமிழகத்தில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது ஃபோர்டு நிறுவனம் மற்றும் தமிழகம் இடையிலான 30 ஆண்டுகள் உறவை நினைவுகூர்ந்த முதல்வர், விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ளவுள்ள உற்பத்தித் திட்டத்துக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.
மேலும், மறைமலைநகர் உற்பத்தி சாலையை முழு அளவுக்கு பயன்படுத்தும் வகையில், ஃபோர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தற்போது ஃபோர்டு நிறுவனம், சென்னையில், மிகப்பெரிய உலகளாவிய திறன் மையத்தை செயல்படுத்தி வருகிறது. 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், இந்நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையத்தை நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், ரூ.3,250 கோடி முதலீடு மற்றும் 600 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தியை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், அமைச்சர் எஸ்.கீர்த்தனா, தொழில்துறை செயலர் ச.விஜயகுமார், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், ஃபோர்டு நிறுவன நிர்வாக இயக்குநர் சிமோனெட்டா வெர்டி, ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
