தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2 நாட்களில் மட்டும் 217 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக்கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாக தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாகச் சாடியிருந்தார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த முறைகேடு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஏற்கெனவே கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் முதற்கட்டமாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மீண்டும் அதே தவறைச் செய்தால் அவர்கள் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் வருமானத்துக்காக பொதுமக்களை சுரண்டக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அண்மையில் அவர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
புகார் சேவை மையம்
எனினும் சில இடங்களில் முறைகேடுகள் தொடர்ந்தன. கூடுதல் வசூல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்க, தமிழக அரசு அண்மையில் பிரத்யேகப் புகார் சேவை மையத்தைத் தொடங்கியது. இந்த மையத்துக்கு வந்த ஏராளமான புகார்களை ஆய்வு செய்த அதிகாரிகள், கள சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் முதல்கட்டமாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 150 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கடந்த 2 நாட்களில் மட்டும் 217 பேர் மீதான இந்த அதிரடி நடவடிக்கை, டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை தொடரும்…
அதேவேளையில் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மதுப்பிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தொடரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
