திருவொற்றியூரில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை கண்டித்த தம்பிக்கு பதில் அண்ணன் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர், சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகீஸ்வரன் (34). இவரது தம்பி சுனில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு திருவொற்றியூர், அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக கல்லூரி மாணவி ஒருவருடன் பேசியபடி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட சுனிலுக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
ஆனாலும் சுனில் மீது மிகுந்த கோபத்தில் இருந்த அந்த இளைஞர்கள், மறுநாள் அதிகாலை சுனிலின் வீட்டுக்குச் சென்று, சுனில் குறித்து அவரது அண்ணன் முகீஸ்வரனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த வாக்குவாதம் முற்றியதன் விளைவாக இளைஞர் கும்பல், முகீஸ்வரனை கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முகீஸ்வரன், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த சாத்தங்காடு போலீஸார், எண்ணூர், தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வரன், ஜான்சன், ஜெயந்த், தருண் ஆகிய 4 இளைஞர்கள் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முகீஸ்வரன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை சாத்தங்காடு போலீஸார் கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
