ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், தன்னை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி மனைவியும் மாமியாரும் வற்புறுத்தி, தனது விருப்பத்துக்கு மாறாக சுன்னத் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த நூர்ஷிகா பேகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், குமாரை இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறு அவரது மனைவி மற்றும் மாமியார் கட்டாயப்படுத்தி அவரது விருப்பத்துக்கு மாறாக சுன்னத் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, குமார் அளித்த புகாரில், மாமியார் நூர்கதூன் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் இருக்கும் அவரது மனைவி நூர்ஷிகா பேகத்தை, விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் அழைத்துள்ளனர்.
இதுகுறித்து, அகில் குமார் சந்தக் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் ஆனது. சுமார் 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். ஆரம்பத்தில் மதம் தொடர்பாக எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர்் என்னை மதம்மாற அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மனைவி தனது கிராமத்துக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, குடும்பப் பிரச்சினையைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி எனது மாமியார் என்னை அழைத்தார். அதன்படி, ஜாலுக்பாரி பகுதிக்கு சென்றபோது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வாகனத்தில் என்னை அழைத்துச் சென்றனர்.
வாகனத்துக்குள் போதைப்பொருள் கலந்த ஒரு பொருள் கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்டு மயங்கிய நிலையில், எனக்கு சுன்னத் செய்யப்பட்டது. மேலும், நான் மறுத்தபோதிலும் மாட்டிறைச்சியைச் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தினர். இதையடுத்து, காவல் துறையில் புகார் அளித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.














