தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பி்ல் இருந்தனர்.
தீபத் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று திடீரென சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், திருப்பரங்குன்றத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றாத நிலையில், திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதுபோன்ற சூழல் தற்போது மீண்டும் உருவாகி உள்ளது.
தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு மனநிலையில் உள்ளதால், திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் திரள வாய்ப்புள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், கோயில் பகுதி மற்றும் மலையைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மலையிலுள்ள தீபத்தூண், தர்கா ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலைக்குச் செல்லும் பழநி ஆண்டவர் கோயில் பாதையில் உள்ள படிக்கட்டுகளை மறித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீஸார் இரவு, பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையைச் சுற்றியுள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் முகங்களை துல்லியமாக அடையாளம் காட்டும் ‘ஏஐ’ கேமராக்களை புதிதாக பொருத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாவட்ட போலீஸாரும் வரவழைக்கப்பட உள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காக காத்திருக்கும் கோயில் நிர்வாகம்
உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்றும் பொறுப்பை ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளது. கோயில் நிர்வாகம் அங்கீகரிக்கும் குழுவினர்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் ஆட்சியர் என்ன சொல்கிறாரோ, அதை நிறைவேற்றுவோம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் தாமிரக் கொப்பரை, நெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதுவரை வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.













