டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது கடந்த ஒரு மாதத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர் இருப்பு, உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவில் குறிப்பிட்டுள்ள திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசின் தரப்பில், கடந்த இரு மாதங்களாக நிலுவையில் உள்ள 13 டிஎம்சி நீரை திறக்கவும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அக்டோபரில் திறக்க வேண்டிய நீரையும் சேர்த்து திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா, ‘‘அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்” என பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் 60வது கூட்டம் நேற்று மாலை டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது “தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா காவிரியில் திறந்துவிட வேண்டும். அக். 24ம் தேதி முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் உறுதிப்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் நவ.6-ம் தேதி நடைபெறும்.














