அருணாசல பிரதேச எல்லையில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல்: பிரதமர் மவுனம் காப்பதாக காங். குற்றச்சாட்டு

0
20

அருணாசல பிரதேசத்தில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக வெளியான தகவல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அருணாசல பிரதேசத்தில் சீன மக்கள் விடுதலை ராணுவத்துடன் (பிஎல்ஏ) பல்வேறு இடங்களில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றங்களின்போது, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஷௌர்யா’ கமாண்டோ பிரிவு தனது திறமையை நிரூபித்துள்ளதாக அந்தப் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, காங்கிரஸ் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “சீன ராணுவ வீரர்களுடனான மோதல்கள் குறித்த தகவல்கள் ஜூலை மாதத்திலிருந்து மறைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறையும் நமது வீரர்களைக் கைவிட்டு, நாட்டுக்குத் துரோகம் செய்து, தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். சில நேரங்களில் சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். மற்ற நேரங்களில் ரோந்துப் பணிக்கான பகுதிகளையும் நாட்டின் நிலப் பரப்பையும் விட்டுக் கொடுக்கிறார். மோடி பலவீனமான பிரதமர். அவர் நாட்டுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தன்னைத் தானே உலக குரு என்று அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடி, சீனாவுக்குத் தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகிறார். அருணாசல பிரதேசத்தில் சீன மக்கள் விடுதலை ராணுவத்துடனான மோதல் குறித்து பிரதமரும், அவரது நிர்வாகமும் இதுவரை காணாத மவுனத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேலும், 2025-26 நிதியாண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 112 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 99 பில்லியன் டாலராக இருந்தது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தற்போது நடைமுறையில் ‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யுங்கள்’ என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here