கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த வயநாட்டில் கடந்த வாரம் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு பகுதியில் நேற்று 320 மி.மி மழை பதிவானது.
கேரளாவில் உள்ள பல அணைகள் நிரம்பிவிட்டன. மலங்கரா அணையில் 5 மதகுகள் திறக்கப்பட்டன. இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. வாகனங்கள் வெள்ள நீரில் ஊர்ந்து செல்கின்றன. கடைகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அலுவா சிவன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மழை பாதிப்பு குறித்து கேரள முதல்வர் சதீஷன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 8 பேரை காணவில்லை. 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 196 வீடுகளில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 5,792 பேர் மீட்பு குழுவினர் மீட்டு 209 நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தால் வீடுகள், உறவினர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவிகள் அளிக்கப்படும். இவ்வாறு சதீஷன் கூறினார்.
ஆரஞ்சு எச்சரிக்கை: கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் நேற்று முன்தினம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. இப்பகுதியில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.















