நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையில் ஒரு செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு கடை உள்ளது. இங்கு ஏராளமான செல்போன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் செல்போன் கடையில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கடை ஷட்டரை திறந்து பார்த்தபோது அங்கிருந்த பொருட்களில் தீ பற்றி எரிந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. ஆனால் எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன என்ற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. மேலும் தீ பிடித்ததற்கான காரணமும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.