தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது:
சூர்யா: மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவது ஒரு வரம். நண்பர் விஜய் மீது தமிழகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள்.
சிவகார்த்திகேயன்: தனது முதல் தேர்தல் களத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்ற விஜய் சாருக்கு பாராட்டுகள். நீங்கள் திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ரவி மோகன்: அதிகாரம் என்பது கொடுக்கப்படலாம். ஆனால், மரியாதை என்பது சம்பாதிக்க வேண்டியது. உங்களுக்கு இந்த இரண்டும் ஆசிர்வாதமாக கிடைத்துள்ளது. இது வெறும் வெற்றி மட்டுமல்ல; மக்களின் நம்பிக்கையால் உருவான புரட்சி.
சூரி: சகோதரர் விஜய்யும், அவரது அணியினரும் மக்கள் சேவையில் இன்னும் உயர்ந்து, எண்ணற்ற மைல்கல் சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். அருண் விஜய்: மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். முதல்வர் விஜய்யின் பயணத்துக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ஒய்.ஜி.மகேந்திரா: விஜய் வெற்றி பெற்றதற்கு ஒரே காரணம்தான். தேங்கிக் கிடந்த தண்ணீரை ஒரு புது வெள்ளம் வந்து அடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அந்த புது வெள்ளம் விஜய்தான் என்று தீர்மானித்தனர்.
அதனால், அவரை கொண்டு வந்துள்ளனர். கொஞ்சம் பாலைவனமாகிவிட்ட தமிழகத்தை மீண்டும் சோலைவனமாக்க வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்.
மகேஷ்பாபு: இந்த வெற்றி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அர்த்தமுள்ள மாற்றமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ரவிதேஜா: சில விஷயங்கள் நிச்சயம் நடக்கும் என்று உள்ளுணர்வில் தெரியும். இதுவும் அத்தகைய ஒன்றுதான் என்று ஆழமாக நம்பினேன். இந்த மாபெரும் வெற்றிக்கும், தொடர்ந்து வெற்றிகள் குவியவும் வாழ்த்துகிறேன்.
நானி: எதிர்பாராத ஒருவர் வெற்றி பெறுவது என்பது எப்போதுமே முழுமையான ‘சினிமா’ அனுபவம்தான். தங்கள் முடிவை தெளிவாகத் தெரிவித்திருக்கும் தமிழக மக்களுக்கு சிறந்த நன்மைகள் விளையும் என்று நம்புகிறேன்.
இதேபோல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பேரரசு, நடிகர்கள் விக்ரம், டைகர் ஷெராஃப், நடிகைகள் அம்பிகா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
