குமரி மாவட்டத்தில் தனியார் நடத்தக்கூடிய கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயிலாக கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலின் கீழ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி, பிஎட் கல்லூரி, திருமண மண்டபம் உள்ளது. இதற்கான நிர்வாகிகள் தேர்வு தேர்தல் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய முதல் நாளான கடந்த 5-ம் தேதி தலைவர் பதவிக்கு குமரேசதாசும், செயலாளர் பதவிக்கு ராஜகுமாரும், பொருளாளர் பதவிக்கு முருகனும், துணைத்தலைவர் பதவிக்கு சந்தோஷ்குமாரும், இணைச்செயலாளர் பதவிக்கு சதீஷ்குமாரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கலுக்கு குறிப்பிட்ட மூன்று நாட்களில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், வேட்புமனு தாக்கல் செய்த ஐந்து பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி வக்கீல் காட்வின் ஜெயக்குமார் அறிவித்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.














