Home உலக செய்திகள் விமானி ஸ்மித் மச்சாருக்கு அவசர அறுவை சிகிச்சை

விமானி ஸ்மித் மச்சாருக்கு அவசர அறுவை சிகிச்சை

0

நடுவானில் துணை விமானி தாக்கியதால் படுகாயம் அடைந்த இந்திய வம்சாவளி விமானி ஸ்மித் மச்சாரின் மண்டை பகுதியில் விரிசல் ஏற்பட்டதாகவும், இதற்கு சவுதி அரேபியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி செப்.30-ம் தேதி 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹம்மாமி உடன் இருந்தார்.

திடீரென பைலட் அறையில் இருந்த விபத்துக்கால அவசர கோடரியால் ஸ்மித் மச்சாரை, ஹமாம் அல் ஹம்மாமி தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், ஹமாம் அல் ஹம்மாமியை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார்.

கடுமையான தாக்குதலுக்கு மத்தியில் ஸ்மித் மச்சார், பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார்.

துணை பைலட்டால் தாக்கப்பட்ட பைலட் ஸ்மித் மச்சார், சவுதி அரேபியாவின் தபூக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஸ்மித் மச்சாரின் மண்டை பகுதியில் விரிசல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

டிப்ரஸ்டு ஃபிராக்சர் (depressed fracture) என இது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மண்டை ஓடு சீரமைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மண்டை ஓடு உடைந்து எலும்பின் ஒரு பகுதி மூளையை நோக்கி உள்நோக்கி தள்ளப்படுவதே டிப்ரஸ்டு ஃபிராக்சர் எனப்படுகிறது. சுற்றியுள்ள சாதாரண எலும்பு மட்டத்தைவிட கீழே இருப்பதால், இது மூளையை அழுத்தவோ அல்லது காயப்படுத்தவோ கூடும் என்றும் அந்த வகையில் இது ஒரு தீவிரமான காயம் என்றும் கூறப்படுகிறது.

விமானியின் கைல கால்கள், மார்பு மற்றும் வயிற்றின் மேல் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் ஸ்மித் மச்சாருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை நன்கு முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 3ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘துணிச்சலான இந்திய விமானி ஸ்மித் மச்சார் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவர் நன்கு குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய உதவிகளை வழங்க, அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

அவருக்குச் சிறந்த கவனிப்பை வழங்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யும் நலம் விரும்பிகளுடன் நாங்களும் இணைகிறோம்’ என தெரிவித்திருந்தது. அதேநாளில், ஸ்மித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கால் மூலம் உரையாடி நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version