தாம்பரத்தில் நடைமேம்பாலப் பணி காரணமாக, மின்சார ரயில்கள் நேற்று காலை முதல் மாலைவரை ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் தாம்பரம் யார்டில், புதிய நடைமேம்பால பணி காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்தது.
மேலும், சென்னை கடற்கரை – பல்லாவரம், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் கூடுவாஞ்சேரி – பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.
கடற்கரை – பல்லாவரம், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதன்காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் பயணிகள் பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து, ஆட்டோ மற்றும் கார்கள் மூலம் பயணம் மேற்கொண்டனர்.
மின்சார ரயில்கள் பல்லாவரம் வரையில் மட்டுமே இயக்கப்படும் என்பதை அறிந்து ஆட்டோ மற்றும் கார்கள் பல்லாவரத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வழக்கத்தை விட ஆட்டோக்களில் கூடுதலாக பணம்வசூலிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினர். செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வரும் பயணிகள் கூடுவாஞ்சேரி வரை ரயிலில் பயணித்தனர்.
அங்கிருந்து பேருந்து மூலம் பயணம் செய்து தாம்பரம், சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு சென்றடைந்தனர். குறிப்பாக, தாம்பரத்தில் ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அனைவருமே பேருந்தில் பயணம் செய்தனர். இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பொங்கல் பண்டிகைக்கு புதிய ஆடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மின்சார ரயில் ரத்தால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மேலும், குறிப்பிட்ட தொலைவுக்கு மட்டும் இயக்கப்பட்ட குறைவான சிறப்பு மின்சார ரயில்களிலும் நெரிசலுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.