பறப்பதற்கு அனுமதி கேட்காதீர்கள்: காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்துக்கு சசி தரூர் பதில்

0
230

பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள் என கார்கே கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. இதில் ஒரு குழுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமை தாங்கினார்.

இந்த பயணம் குறித்து, ‘தி இந்து’ நாளிதழில் சசி தரூர் கடந்த திங்கள்கிழமை ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில், “பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு ஆகியவை சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய சொத்தாக இருந்தன” என கூறியிருந்தார். இந்த கட்டுரை பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது.

இவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், பிரதமரை பாராட்டியது பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி அல்ல என்றும் தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்பதன் பிரதிபலிப்பு என்றும் சசி தரூர் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவசரநிலை பிரகடண நாளை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசி தரூர் எழுதிய கட்டுரை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “சசி தரூர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். என்னால் ஆங்கிலம் சரியாக படிக்க இயலாது. அவருடைய மொழி மிகச் சிறப்பு. அதனால்தான் அவரை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமித்தோம்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட ராணுவத்துக்கு ஆதரவு அளித்தோம். நாடுதான் முதல், கட்சி பின்னர்தான் என நாங்கள் சொல்கிறோம். ஆனால், சிலர் மோடிதான் முதல், நாடு என்பது பிறகுதான் என கருதுகின்றனர். என்ன செய்ய முடியும்” என்றார்.

பிரதமர் மோடியை பாராட்டிய சசி தரூரை மறைமுகமாக சாடும் வகையில் கார்கே இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில், சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பறவையின் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள். சிறகுகள் உங்களுடையது, ஆகாயம் யாருக்கும் சொந்தம் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here