காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நாளை காலை கரையை கடக்கும்: எங்கெல்லாம் ‘ரெட் அலர்ட்’?

0
25

வங்​கக்​கடலில் நிலவும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்​கால் – மாமல்​லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்​கக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்​டங்​களில் இன்றும், 7 மாவட்​டங்​களில் நாளை​யும் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்​திரன் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதுதற்போது இலங்கை திரிகோணமலைக்கு வடகிழக்கே 200 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 470 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது விரைவில் வடக்கு திசையில் நகர்ந்து வெள்ளிக் கிழமை காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுப்பெற்று இருக்கும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும். அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கரையோரம், மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நவ.30-ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இதன் காரணமாக டிச.2-ம் தேதி வரை தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், 3, 4-ம் தேதி​களில் ஒருசில இடங்​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும்.இன்று (நவ.29) செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர், மயிலாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர் மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களில் ஒருசில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதிக​னமழை​யும் (‘ரெட் அலர்ட்’), சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, பெரம்​பலூர், திருச்சி, புதுக்​கோட்டை, சிவகங்கை, ராமநாத​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: நாளை (நவ.30) சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி, கடலூர் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் ஒருசில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதிகனமழை​யும் (‘ரெட் அலர்ட்’), ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, பெரம்​பலூர், அரியலூர், தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை மாவட்​டங்​கள், காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்​கல், திருச்சி, புதுக்​கோட்டை, கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும்.

டிசம்பர் 1-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்​பூர், திண்​டுக்​கல், ஈரோடு மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்​கல், கரூர், தேனி, மதுரை மாவட்​டங்​களில் கனமழை​யும், 2-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல், ஈரோடு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் பொதுவாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் இடி, மின்னலுடன் கனமழை அல்லது மிக கனமழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்​தில் அதிகபட்​சமாக நாகப்​பட்​டினத்​தில் 6 செ.மீ., நாகப்​பட்​டினம் மாவட்டம் வேளாங்​கண்ணி, கோடியக்​கரை, திருப்​பூண்டி, திருக்கு​வளை, வேதா​ரண்​யம், திரு​வாரூர் மாவட்டம் திருத்​துறைப்​பூண்​டி​யில் 5 செ.மீ., திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்டம் தலைஞா​யிறு, மயிலாடு​துறை மாவட்டம் செம்பனார்​கோ​வில், சீர்​காழி​யில் 4 செ.மீ. மழை பதிவாகி​
உள்​ளது.

பலத்த தரைக்​காற்று: வடதமிழக கடலோரம், அதை ஒட்டி​யுள்ள பகுதி​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களில் இன்று மாலை 4 மணி வரை 45-55 கி.மீ. வேகத்​தி​லும், இடையிடையே 65 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த தரைக்​காற்று வீசக்​கூடும். இன்று மாலை முதல் நாளை பிற்​பகல் வரை அதிகபட்சம் 70 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும்.

30-ம் தேதி வரை தமிழக, ஆந்திர கடலோர பகுதி​கள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்​கடல் பகுதி​கள், தென்​மேற்கு, மத்திய மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் அதிகபட்சம் 75 கி.மீ. வேகத்​தில் சூறாவளி காற்று வீசக்​கூடும். எனவே, இப்பகு​தி​களுக்கு மீனவர்கள் செல்ல வேண்​டாம். இவ்​வாறு அவர்​ கூறினார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here