தமிழகத்தில் உள்ள 4,453 வேளாண் கடன் சங்கங்கள் பொது சேவை மையங்களாகவும் செயல்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில், ‘தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தவும், அந்த சங்கங்களை பொதுமக்கள் சேவை மையமாக மாற்றவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?’ என்று தி.மு.க. எம்.பி., கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:4கிராமப்புறங்களில் இயங்கும் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நாட்டிலுள்ள 67,930 வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கி ஒருங்கிணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள பொதுவான மென்பொருள் மூலம் நடக்கும் இந்தப் பணிகள் முழுமை அடைந்தால், இந்த சங்கங்களின் செயல்திறன் பல மடங்கு அதிகரிக்கும். விரைவாக கடன் வழங்குதல், குறைந்த சேவைக் கட்டணம், பணம் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை போன்ற நன்மைகளை இதன்மூலம் பெற முடியும். வேளாண் கடன் சங்கங்கள், தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் பால் பண்ணை, மீன் பிடித்தல், பூக்கள் சாகுபடி, கிடங்குகள் அமைப்பது, உணவு தானியங்கள், விதைகள் மற்றும் உரங்கள் கொள்முதல் போன்ற பொருளாதாரத்தை மையப்படுத்திய 25-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை கையாளும் வகையில் சங்க விதிகள் திருத்தி அமைக்கப்படும்.
பிரதமரின் விவசாயத் தகவல் மற்றும் விவசாயப் பொருட்கள் மையத் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு விதைகள், உரம், பூச்சிக்கொல்லி போன்ற பொருட்களை வழங்கும் மையமாக வும், பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் வழங்கும் மையங்களாகவும் இந்த வேளாண் சங்கங்கள் செயல்பட இருக்கின்றன.
அத்துடன், வங்கிப் பரிவர்த்தனை, ஆயுள் காப்பீடு, ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்தல், சுகாதாரம் தொடர்பான சேவைகள், மின்சாரக் கட்டணம் செலுத்துவது போன்ற 300-க்கும் அதிகமான சேவைகளை வழங்கும் பொதுசேவை மையமாக இந்த வேளாண் கடன் சங்கங்கள் செயல்படும். இதன்மூலமாக கிராமப்புற மக்கள் எளிதில் இந்த சேவைகளைப் பெற முடியும். நாட்டில் ஒட்டுமொத்தமாக 40,214 வேளாண் கடன் சங்கங்களும், தமிழகத்தில் 4,453 சங்கங்களும் இவ்வாறு பொது சேவை வழங்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை வேளாண் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு
பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை கணினிமயப்படுத்த இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.28.2 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு பதிலளித்தார்.