பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

0
157

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்புக் குழுக்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் கடந்த சனிக்கிழமை ( ஜன.17) இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிக வளாகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தளங்களில் கடைகளைக் கொண்டிருந்த இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) இரவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே ஆறு உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், காயமடைந்தோர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், தொடர்ந்து தீ பரவியதால், மீட்புக் குழுக்களால் உள்ளே சென்று மீட்புப்பணிகளை தொடர முடியவில்லை.

இதுகுறித்து மீட்புப் பணிக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அபித் ஜலால் பேசுகையில், “தீ அணைக்கப்பட்டதும், நாங்கள் கட்டிடம் குளிர்வடையும் வரை காத்திருக்காமல், வலுக்கட்டாயமாக உடனடியாக உள்ளே சென்று சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றோம். அப்போது மேலும் எட்டு உடல்களைக் கண்டெடுத்தோம்; அவற்றில் சில உடல்கள் கடுமையாகக் கருகியிருந்தன. தீ விபத்தால் கட்டிடத்தின் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. மேலும் பல கட்டமைப்பு இடிந்து விழக்கூடும் என்பதால், காணாமல் போனோரை தேடும் பணியை தொடர்ந்து வருகிறோம்” என்று கூறினார்.

இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் டெசோரி, கட்டிடத்திற்குள் 70 பேர் இன்னும் சிக்கியிருப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். “நாங்கள் மிகுந்த கவலையுடனும் அதிர்ச்சியுடனும் இருக்கிறோம். சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் இது ஒரு தேசிய துயரம்” என்று டெசோரி கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here