மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கருணை மனு நிராகரிப்பு

0
55

டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்தீவிரவாதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்22-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, கடந்த 2001-ம் ஆண்டில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரீபை கைது செய்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லிஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2007-ம்ஆண்டில் தீவிரவாதி முகமது ஆரீபின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து தீவிரவாதி முகமது ஆரீப், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிராகரித்து உள்ளார்.

இந்நிலையில் முகமது ஆரீப்தரப்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி முகமது ஆரீப் கடந்த மே 15-ம் தேதி கருணை மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் குடியரசுத் தலைவர் விரிவான ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி கடந்த மே 27-ம் தேதி கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.