போர்ச்சுகல் அணிக்கு ‘குட்-லக்’ சொல்லி வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ

0
20

போர்ச்சுகல் அணிக்கு ‘குட்-லக்’ சொல்லிய நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேஷன்ஸ் லீக் தொடரில் விளையாடி வரும் அந்த அணியில் இருந்து வெளியேறினார்.

41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்தாட்ட உலகில் தேசிய அணி மற்றும் கிளப் அணிகள் என ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோல்களை பதிவு செய்தவர் என்ற மகத்தான சாதனையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இதுவரையில் 979 கோல்களை பதிவு செய்துள்ளார். ஆயிரம் கோல்களை எட்ட இன்னும் 21 கோல்கள் மட்டுமே அவருக்கு தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் இது நடந்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த விலகல் முடிவு ‘ஓய்வுக்கான அறிவிப்பா?’ என்று அவரது ரசிகர்கள் மற்றும் கால்பந்து ஆர்வலர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

என்ன நடந்தது?

நேஷன்ஸ் லீக் தொடரில் போர்ச்சுகல் அணி விளையாடி வருகிறது. இதில் செப்.28-ம் தேதி அன்று நடைபெற்ற நார்வே அணிக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் இடம் பெறவில்லை. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது. கடந்த 18 ஆண்டுகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்தில் அணி உடன் இருந்த சூழலில் களம் காணாதது இது முதல் முறையாக அமைந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (அக்.2) அதிகாலை டென்மார்க் உடன் போர்ச்சுகல் அணி விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் கூறியதாவது: நார்வே உடனான ஆட்டத்தில் கோன்சாலோ ராமோஸ் சிறப்பாக விளையாடினார். அதனால் மாற்று வீரர் மூலம் அவரது ஆட்டத்தின் போக்கை மாற்ற நான் விரும்பவில்லை என்றார்.

தொடர்ந்து டென்மார்க் உடனான ஆட்டத்தில் ரொனால்டோ விளையாடுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ‘எங்கள் திட்டப்படி அனைத்தும் சென்றால் கோன்சாலோ ராமோஸ் விளையாடுவார். எனக்கு ரொனால்டோ களத்தில் வேண்டுமென்றால், அவர் களத்துக்கு வருவார். எனக்கு வேண்டாம் என்றால், அவர் வரமாட்டார்’ என்று தெரிவித்தார். இந்தச் சூழலில் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறினார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவு

“தேசிய அணியின் பயிற்சியாளர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் உடன் பேசினேன். அதன் பிறகு நான் தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தேன். இது குறித்த உண்மையை உரிய நேரத்தில் போர்ச்சுகல் மக்களிடம் தெரிவிப்பேன். தேசிய அணிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளேன்.

போர்ச்சுகல் அணி, சக அணி வீரர்கள் அனைவருக்கும் குட்-லக் தெரிவிக்க இதுவே சரியான தருணம்” என்று சமூக வலைதள பதிவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி உள்ள ரொனால்டோ, 146 கோல்களை பதிவு செய்துள்ளார். 2026-ம் ஆண்டு தான் கால்பந்தாட்ட களத்தில் தனது கடைசி ஆண்டு என்று ஏற்கனவே அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here