சேவைக் குறைபாடுகள், நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள், தவறான விளம்பரத்தால் பாதிக்கப்படுவோர் அவரவர் இருப்பிடத்தில் இருந்தோ அல்லது வணிகம் செய்யும் இடத்தில் இருந்தோ துரிதமாக புகார் செய்ய வசதியாக நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்படும் என்று பேரவையில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்படும் சேவைக் குறைபாடுகள், நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள், தவறான விளம்பரத்தின் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும்போது அவர்கள் இருப்பிடத்தில் இருந்தோ அல்லது வணிகம் செய்யும் இடத்தில் இருந்தோ விரைவாக புகார் அளிக்க வசதியாக நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ரூ.20 லட்சத்தில் நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் செல்போன் செயலி (Consumer Grievance web portal and Mobile app) உருவாக்கப்படும்.
தமிழகம் முழுவதும் இளம் நுகர்வோரிடையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.50 லட்சத்தில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வசதிகளுடன் மொத்தம் 2.63 லட்சம் டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 20 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ரூ.399.19 கோடியில் கட்டப்படும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 49 ஆயிரம் டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நெல் சேமிப்பு வளாகங்கள் ரூ.69.82 கோடியில் கட்டப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சென்னை மாதவரம் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் பரீட்சார்த்த முறையில் அதிநவீன கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ரூ.10 கோடியில் நிறுவப்பட்டு அதன் செயல்திறன் மேம்படுத்தப்படும். நான்கு டெல்டா மாவட்டங்களில் தலா ரூ.2 கோடியில் 5 மெகா நெல் கொள்முதல் நி்லையங்கள் ரூ.10 கோடியில் நிறுவப்படும். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் 3400 டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு ரூ.5 கோடியில் கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.