தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்காப்பியர் அறக்கட்டளையின் சார்பில், தொல்காப்பியர் 2736-வது பிறந்த நாளையொட்டி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தவினய்குமார் மீனா, இன்று (12.05.2025) காப்பிக்காடு பகுதியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து தொல்காப்பியர் குறித்து மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகம் வழங்கி, பாராட்டினார்கள். மேலும் கவிஞர் தமிழ்குழவி மற்றும் முனைவர் ச. இலட்சுமணன் அவர்களுக்கு தொல்காப்பியர் அறக்கட்டளை விருது வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தபா. ஜாண் ஜெகத் பிரைட், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பொ) கனகலெட்சுமி, தொல்காப்பியர் அறக்கட்டளை தலைவர் தமு. பாஸ்கரன், முத்தமிழ் மன்ற தலைவர் தமிழ்ச்செம்மல் முளங்குழி பா. இலாசர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.கே. சிந்துகுமார், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.