கருங்கல் அருகே செவிலியர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையைக் கண்டித்து, கருங்கல் ஆட்டோ நிலையம் முன் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேரள மாநிலம், வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சிலி (21). இவர் கருங்கல் அருகே மூசாரி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், விடுதியில் தங்கி 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இவரை, கல்லூரி முதல்வர் சக மாணவிகள் முன் கண்டித்தாராம். உடனே ஆன்சிலி கல்லூரியின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்தாராம். பலத்த காயமடைந்த அவரை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவி தற்கொலைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் சந்திரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் விஷ்ணு, பொருளாளர் விபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் சங்கத் தலைவி ஜனனி விளக்கவுரையாற்றினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் நினைவுரையாற்றினார். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.















