பிஹார் முதல்வர் பதவிக்கு குறி வைக்கும் சிராக்

0
208

மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான், பிஹார் முதல்வர் பதவிக்கு மீண்டும் குறிவைத்துள்ளார்.

பிஹாரில் வரும் அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து கூறிய சிராக் பாஸ்வான், பிஹார் அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகவும், தேசிய அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார்.

எல்ஜேபி இளைஞர் அணி மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாட்னாவில் நடைபெற்றது. அதில் சிராக் பாஸ்வான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவும் மாநில அரசியலில் தீவிரம் காட்டவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மாநாட்டில் சில பேச்சாளர்கள் அவரை முதல்வர் பதவிக்கான முகமாக்கவும் விரும்பினர். இதனால், பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ தொகுதிப் பங்கீட்டு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிஹாரில் கடந்த 2020 தேர்தலில் எல்ஜேபி தனித்துப் போட்டியிட்டது. 135 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வென்றது. முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு (ஜேடியு) எதிராக 115 தொகுதிகளில், எல்ஜேபி வேட்பாளர்களை நிறுத்தியது. தேர்தலில் 5.6% வாக்குகளை பெற்றது.

இதன் விளைவாக, 2015-ல் 71 இடங்களில் வென்ற ஜேடியு 43 இடங்களை மட்டுமே பெற்றது. பாஜக 74 இடங்களில் வென்றது. ஆனால் 2020 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு எல்ஜேபியில் சிரமங்களும் எழுந்தன. கட்சியின் 6 எம்.பி.க்களில் 5 பேர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இதை சமாளித்ததுடன் எல்ஜேபியை மீண்டும் உயிர்ப்பித்து, மக்களவைத் தேர்தலில் 5 எம்.பி.க்களுடன் பிஹாரின் மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றினார் சிராக்.

இந்நிலையில், கடந்த தேர்தலை போல் எல்ஜேபி மீண்டும் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிராக் தனித்து போட்டியிட்டால் ஜேடியுவின் வாக்குகள் பிரிந்து அக்கட்சியின் வெற்றி பாதிக்க வாய்ப்புள்ளது.

எனினும், பாஜகவுக்கு கடந்த தேர்தலை போல் இம்முறை ஜேயுடிவை விட அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து வரும் தேர்தல் வெற்றிக்கு பிறகு பாஜக முதல்வர் பதவியை கோரும் சூழலும் எழுந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here