பொங்கல் விழாவை சென்னையின் எஃப்சி (கால்பந்து கிளப்) அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் கிளப் அணிக்காக விளையாடும் சீனியர் மற்றும் ஜூனியர் அணி வீரர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இதில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உறியடி, கயிறு இழுக்கும் போட்டியிலும் கிளப் வீரர்கள் களமாடி அசத்தினர். வீரர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் எஃப்சி அணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த சூழலில் அவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றது சென்னை மற்றும் தமிழக மண்ணோடு அவர்களுக்கு பிணைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.
அண்டர் 13, அண்டர் 15 மற்றும் சீனியர் வீரர்கள், அணியின் பயிற்சியாளர் குழுவினர் மற்றும் அணியோடு தொடர்புள்ள ஊழியர்கள் என அனைவரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இந்த கொண்டாட்ட தருணம் கால்பந்து விளையாட்டை கடந்தது என்றும், ஒற்றுமை, கலாச்சாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டம் என்றும் சென்னையின் எஃப்சி தெரிவித்துள்ளது.