சென்னை | பயணியுடனான மோதல் விவகாரம்: மாநகர போக்குவரத்து ஊழியர் 3 பேர் இடைநீக்கம்

0
52

கோயம்பேட்டில், பயணியுடன் மோதிக் கொண்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மதுரவாயல் வடக்கு மெட்ராஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் கடந்த 12-ம் தேதி இரவு கிண்டியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து, மாநகரப் பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

பின், மதுரவாயலில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல பேருந்தில் ஏற முற்பட்டபோது, அப்பேருந்து நிற்காமல் சென்றது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலைய நேரக் காப்பாளர் அறைக்குச் சென்று, அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்து துறை ஊழியர்கள், சரவணனை தாக்கினர். இதில், அவரது மூக்கில் ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சரவணனை ஊழியர்கள் தாக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியானது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் அளித்த விளக்கத்தில், “விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பயணி நேரக்காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இழிவான வார்த்தைகளைக் கூறி திட்டியதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பானதாகவும் தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here