சென்னை விமான நிலையத்தில் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையத்தின் புறப்பாடு, வருகை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவசர காலங்களில் உபயோகப்படுத்துவதற்காக தீயணைப்பான் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கருவிகளை, விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆஃப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த சிலிண்டர்கள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு புதிய சிலிண்டர்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கிடையே, கடந்த 2011-ம் ஆண்டு பொருத்தப்பட்ட சிலிண்டர்களின் ஆயுட்காலம் 2021-ம் ஆண்டில் காலாவதியாகிவிட்டது. ஆனால், புதிய சிலிண்டர்கள் மாற்றப்படாமல், 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் பயணி ஒருவர், சிலிண்டர்களை தனது செல்போன்களில் போட்டோ எடுத்து, எக்ஸ் வலைதளத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா சென்னை விமான நிலையம் அதிகாரிகளுக்கு தகவல் தேரிவித்தார்.
அந்தப் பதிவில், விமான நிலைய பாதுகாப்பில் ஏன் அலட்சியம் காட்டுகிறீர்கள்? என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா சென்னை விமான நிலைய அதிகாரிகள், அதே எக்ஸ் வலைதளப்பதிவில், 2024-ம் ஆண்டு டிச.30-ம் தேதி அந்த சிலிண்டர்களை மாற்றி, புதிய சிலிண்டர்கள் அமைத்து விட்டோம். இப்போது சென்னை விமான நிலையத்தில் அனைத்து தீயணைப்பு சிலிண்டர்களும் தகுதியான நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், 2021-ம் ஆண்டு மாற்ற வேண்டிய அவசரகால தீயணைப்பு சிலிண்டர்கள் 3 ஆண்டுகள் காலதாமதமாக 2024-ம் ஆண்டு டிச.30 வரை மாற்றாமல் இருந்ததற்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.