முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப் பதிவு

0
15

முதல்வர் விஜய் குறித்து அவதூறான வகையில் பேசியதாகத் திமுக எம்.பி. ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீஸார் தனித்தனி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், திமுக குறித்தும் மறைந்த அதன் முக்கிய தலைவர்கள் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத் துறை ஆவணங்களை மேற்கோள் காட்டி பேசினார். ஊழல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.

இதற்கு, திமுக.வினர் கண்டனம் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகத் தமிழக முதல்வர் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் விஜய்யை ஒருமையில் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து சமூக நலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல், சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவும் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரின் தாய் ஆகியோரைச் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதுவும் தவெகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கெனவே, போலீஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் திமுகவினர் மீது, இரு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here