பேரவைத் தலைவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும்போது ஆதரவாக வாக்களித்தால் ரூ.35 கோடி தருவதாகக்கூறி தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய நபர்களாகக் கருதப்படும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள நிலையில் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கோரி, ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது, இதற்கிடையே, கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதை எதிர்த்தும், அத்தொகுதி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஈரோட்டைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.பாபு முருகவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
