கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் விவசாயிகள் பேரணி நடத்தினர். தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது.
எழும்பூர் சித்ரா திரையரங்கம் முதல் எல்.ஜி. சாலை சந்திப்பு வரை நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக சாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மாநிலத் தலைவர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த திரளான விவசாயிகள் இதில் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகளுக்கு ஏமாற்றம்
அப்போது செய்தியாளர்களிடம் ஈசன் முருகசாமி கூறியதாவது: தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் உறுதியளித்தார்.
இது வெறும் வாக்குறுதி அல்ல, விவசாயிகளுக்கான உத்தரவாதம் என்றும் கூறினார். இதனை நம்பியே விவசாயிகள் வாக்களித்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம் என விவசாயிகளை ஏலம் விட்டு வருகிறார். பயிருக்கு உரிய விலை கிடைக்காமலும், கடன் சுமையாலும் தமிழகத்தில் நாள்தோறும் 2 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக அரசு புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.
அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், இந்த தற்கொலைகளின் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
மாநிலம் தழுவிய போராட்டம்
விவசாயிகளை மிரட்டும் போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும். உடனடியாக பயிர் கடன்களை ரத்து செய்யாவிட்டால், அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
