உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் மியாமி கார்டனில் நேற்று ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான உருகுவே , அறிமுக அணியான கேப் வெர்டேவை சந்தித்தது. 21-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணி முதல் கோலை அடித்தது.
கேப் வெர்டே அணியின் வீரர் கெவின் பினா 30 அடி தூரத்தில் இருந்து ஃப்ரீ-கிக் மூலம் அடித்த பந்து உருகுவே அணியின் தடுப்பு அரண்களை கடந்து கோல்கீப்பர் முஸ்லெராவை ஏமாற்றி நேராக கோல் வலையின் கீழ் கார்னரை துளைத்தது. உலகக் கோப்பை வரலாற்றில் கேப் வெர்டே அணி பதிவு செய்த முதல் கோலாக இது அமைந்தது. இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.
44-வது நிமிடத்தில் உருகுவே அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் வீரர் உகார்த்தே பந்தை பெனால்டி பாக்ஸிற்குள் ஆபத்தான கிராஸ் மூலம் தூக்கி அடித்தார். அங்கே பென்குர் உயரே எழும்பி தலையால் பந்தை முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் அவர், அடித்த பந்து கேப் வெர்டே அணியின் வீரர் ஹோப்ஸ் காப்ரால் மீது பட்டு, வலது பக்க போஸ்ட்டில் மோதித் திரும்பியது. திரும்பி வந்த பந்தை உருகுவே வீரர் மாக்ஸிமிலியானோ அரவூஜோ தலையால் முட்டி கோல் வலைக்குள் தட்டிவிட்டார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 45+6-வது நிமிடத்தில் உருகுவே அணி 2-வது கோலை அடித்தது. வலது பக்கத்திலிருந்து உகார்த்தே தூக்கி அடித்த பந்தை அரவூஜோ தலையால் முட்டினார். பந்து கோல் போஸ்ட்டிற்கு வெளியே செல்லவிருந்த நிலையில், அங்கே ஓடிவந்த அகஸ்டின் கனோபியோ மிக அருகிலிருந்தபடி பந்தை கோல் வலைக்குள் தட்டி விட்டார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் உருகுவே 2-1 என முன்னிலை பெற்றது.
61-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணியின் வீரர் ஆலிவேரா, உருகுவே அணியின் தற்காப்பு வரிசைக்கு குறுக்காக கொடுத்த பாஸை பெற்ற பதிலி வீரரான ஹெலியோ வரேலா விரைவாக பந்தை கடத்திச் சென்றார். அப்போது உருகுவே அணியின் கோல் கீப்பர் முஸ்லெரா தனது எல்லையில் இருந்து முன்னேறி வந்து தடுக்க முயன்றார். ஆனால் அவருக்கு போக்கு காட்டிய ஹெலியோ வரேலா காலியாக இருந்த கோல் வலைக்குள் பந்தை எளிதாக செலுத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் டார்வின் நூனியெஸ், ஃபெடெரிகோ வல்வெர்டே ஆகியோர் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கேப் வெர்டே அணியின் தற்காப்பை அவர்களால் உடைக்க முடியவில்லை. இறுதிவரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
கேப் வெர்டே அணி தனது முதல் ஆட்டத்தில் வலுவான ஸ்பெயினை கோல்களின்றி டிரா செய்திருந்தது. உருகுவே அணிக்கும் இது 2-வது டிராவாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தை சவூதி அரேபியாவுக்கு எதிராக 1-1 என டிரா செய்திருந்தது.
இரு அணிகளுமே 2 புள்ளிகளை பெற்றிருந்தாலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் உருகுவே அணி 2-வது இடத்தில் உள்ளது. உருகுவே அணி தனது கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயினுடன் வரும் 27-ம் தேதி மோதுகிறது.
அதேநாளில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் கேப் வெர்டே, சவூதி அரேபியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தின் வெற்றி, தோல்வி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்வதாக இருக்கும். உருகுவே அணியின் கோல்கீப்பர் முன்னேறி வந்த நிலையில் பந்தை கோல் வலையை நோக்கி அடிக்கிறார் கேப் வெர்டே அணியின் ஹெலியோ வரேலா.















