Home விளையாட்டு செய்திகள் 1986 சேப்பாக்கம் ‘டை’ டெஸ்ட்டை மறக்க முடியுமா?

1986 சேப்பாக்கம் ‘டை’ டெஸ்ட்டை மறக்க முடியுமா?

0

1986-ம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 22 வரை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு அத்தியாயமாகத் திகழ்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் இரண்டாவது ‘டை’ ஆக முடிந்த அந்தப் போட்டியில், கபில் தேவின் அதிரடி சதமும், டீன் ஜோன்ஸின் பிரமாதமான இரட்டைச் சதமும், கடைசி பந்துகளின் பரபரப்பும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்தன.

அன்றைய தினம், அதாவது இதே நாளில் அன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள். வெற்றிக்கு இன்னும் 4 ரன்கள் தேவை; கையில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே. எதிரணியின் பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த கிரெக் மேத்யூஸ். ஸ்டிரைக்கில் இந்தியாவின் கடைசி வீரர் மணிந்தர் சிங். அந்த சில நிமிடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றையே மாற்றப்போகிறது என்று அப்போது யாரும் நினைத்திருக்க முடியாது.

இறுதியில், மேத்யூஸ் வீசிய ஓவரின் ஐந்தாவது பந்தில் மணிந்தர் சிங் எல்பிடபிள்யூ ஆனார். இந்தியாவின் ஸ்கோர் 347. இலக்கு 348. ஆஸ்திரேலியாவும் 574, 170 என இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 744 ரன்கள் எடுத்திருந்தது; இந்தியா 397, 347 என 744 ரன்களையே எடுத்திருந்தது. வெற்றியாளரும் இல்லை, தோல்வியாளரும் இல்லை – போட்டி வரலாற்று ‘டை’!

அதுதான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு போட்டி ‘டை’ ஆன தருணம். 1960-ல் ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையே பிரிஸ்பேனில் நடந்த முதல் ‘டை’ டெஸ்ட்டுக்குப் பிறகு, 26 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கம் மீண்டும் அந்த அதிசயத்தைப் பார்த்தது.

ஆனால், அந்த இறுதி பரபரப்புக்கு முன்பாக, இந்தப் போட்டி ஏற்கெனவே பல வீரர்களின் அசாதாரண ஆட்டத்தால் வரலாற்றுச் சிறப்பைப் பெற்றிருந்தது.

ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. டீன் ஜோன்ஸ் சென்னையின் கடும் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் பொருட்படுத்தாமல் 330 பந்துகளில் 210 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 27 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் இடம்பெற்றன. ஆட்டம் முடிந்த பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அளவுக்கு கடுமையான சூழலில், அவர் அந்த இன்னிங்ஸை விளையாடினார். டேவிட் பூன் 122 ரன்களும், கேப்டன் ஆலன் பார்டர் 106 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா 574 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் கபில் தேவ் தனது வழக்கமான அதிரடி பாணியில் 119 ரன்கள் குவித்தார். வெறும் 138 பந்துகளில் வந்த அந்த சதத்தில் 21 பவுண்டரிகள் அடங்கின. சுழற்பந்து வீச்சாளர் கிரெக் மேத்யூஸ் இந்திய பேட்டிங் வரிசையை அச்சுறுத்திய போதும், கபில் தேவின் அதிரடி ஆட்டம் இந்தியாவை 397 ரன்களுக்கு அழைத்துச் சென்றது.

இந்தியாவை 397 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு 177 ரன்கள் முன்னிலை கிடைத்தது. மேத்யூஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மீண்டும் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 348 ரன்கள் இலக்கு; குறைந்தபட்சம் 87 ஓவர்கள் மட்டுமே. ஆலன் பார்டர் வெற்றியை நோக்கித்தான் அந்த இலக்கை நிர்ணயித்தார். இந்திய கேப்டன் கபில் தேவும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

கடைசி நாள் ஆட்டம் தொடங்கியபோது இந்தியாவுக்கு இலக்கு கடினமாகத் தெரிந்தது. ஆனால் சுனில் கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சிறப்பாக ஆட, இந்தியா தேநீர் இடைவேளையில் 2 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் என்ற நிலையை எட்டியது. பின்னர் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் என்ற நிலைக்கும் சென்றது. வெற்றிக்கு இன்னும் 18 ரன்கள் மட்டுமே தேவை; கையில் 4 ஓவர்கள்!

அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவின் ரே பிரைட் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். சேத்தன் சர்மா, கிரண் மோர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துவீச்சில் வீழ்த்திய அவர், இந்தியாவின் வெற்றி கனவை திடீரென கேள்விக்குறியாக்கினார்.

ஸ்கோர் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள். வெற்றிக்கு 4 ரன்கள், கையில் ஒரே விக்கெட்.

அப்போது களத்தில் இருந்தவர் சிவ்லால் யாதவ். அவர் கிரெக் மேத்யூஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை மீண்டும் உயர்ந்தது. ஆனால் அடுத்ததாக ரே பிரைட் அவரையே வீழ்த்தினார்.

இப்போது களத்தில் வந்தார் கடைசி வீரர் மணிந்தர் சிங் (இந்தியாவின் 11-வது வீரர்).

பிரைட்டின் ஓவரை மணிந்தர் சமாளித்தார். இதனால் கடைசி ஓவரில் இந்தியாவுக்கு வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. பந்தை வீச வந்தவர் கிரெக் மேத்யூஸ். மறுபுறம் அனுபவம் வாய்ந்த ரவி சாஸ்திரி.

முதல் பந்து — ரன் இல்லை.

இரண்டாவது பந்து — சாஸ்திரி 2 ரன்கள் எடுத்தார்.

இப்போது 2 ரன்கள் தேவை.

மூன்றாவது பந்தில் சாஸ்திரி ஒரு ரன் எடுத்தார்.

ஸ்கோர் சமன்!

இந்தியாவால் இனி தோற்க முடியாது. ஆனால் வெற்றிக்கு இன்னும் ஒரு ரன் மட்டுமே தேவை. அந்த ஒரு ரன்னை எடுக்க வேண்டியது மணிந்தர் சிங்.

நான்காவது பந்து – ரன் இல்லை. இன்னும் ஒரு பந்து. வெற்றிக்குத் தேவை ஒரு ரன். மேத்யூஸ் மீண்டும் ஓடி வந்தார்.

ஐந்தாவது பந்து – மணிந்தரின் காலில் பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரே குரலில் எல்பிடபிள்யூ முறையிட்டனர். நடுவர் விக்ரம்ராஜுவின் விரல் உயர்ந்தது. மணிந்தர் சிங் — எல்பிடபிள்யூ! ஆனார்.

இந்தியா 347 ரன்களுக்கு ஆல்-அவுட். வெற்றி பெற முடியவில்லை என்ற ஆதங்கம் ரவி சாஸ்திரியின் முகத்தில் தெரிந்தது. மணிந்தர் சிங் நாட் அவுட் என்று அவர் நடுவரிடம் வாதமும் செய்தார். இரு அணிகளின் மொத்த ஸ்கோரும் சமம். டெஸ்ட் போட்டி ‘டை’!

அந்தப் போட்டியில் கிரெக் மேத்யூஸ் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை (10/249) வீழ்த்தினார். ஒரே டெஸ்ட்டில் அவரது முதல் மற்றும் ஒரே 10 விக்கெட் சாதனையாகவும் அது அமைந்தது. மறுபுறம் ரே பிரைட் 5 விக்கெட் எடுத்தார்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் எடுத்த கபில் தேவின் அதிரடி சதமும், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் குவித்த டீன் ஜோன்ஸின் அசாத்திய இரட்டைச் சதமும் போட்டியின் மிகப்பெரிய தனிப்பட்ட சாதனைகளாக அமைந்தன. இருவரும் இணைந்து ஆட்ட நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவமும் அந்தப் போட்டியில் நடந்தது. சுனில் கவாஸ்கர் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை எட்டினார்.

சென்னை சேப்பாக்கத்தில் 1986 செப்டம்பர் 22 அன்று முடிந்த அந்தப் போட்டி, இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகவும் பரபரப்பான முடிவுகளில் ஒன்றாக நினைவுகூரப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version