சென்னை, மதுரையில் இருந்து பம்பைக்கு பேருந்து சேவை

0
117

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு விரைவு பேருந்துகள் சேவை நேற்று தொடங்கியது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நவம்பர் 15 முதல் ஜனவரி 16-ம் தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூரில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள், இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி இல்லாத சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து பம்பைக்கு இயக்கப்படும் பேருந்துகளை விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியதாவது: சென்னை கோயம்பேட்டில் இருந்து பிற்பகல் 2.00 மற்றும் 3.00 மணிக்கும், கிளாம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 2.30 மற்றும் 3.00 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும்.

இதேபோல, மதுரையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் பேருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக பம்பை சென்றடையும். புதுச்சேரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் பேருந்து கடலூர், நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி வழியாகவும், திருச்சியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் பேருந்து திண்டுக்கல், தேனி வழியாகவும் பம்பை சென்றடையும்.

செயலி மூலம் முன்பதிவு: பேருந்து இருக்கைகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளபடி டிசம்பர் 27 முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here