தமிழகத்தில் பிப்.8-ம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

0
39

பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மாநில உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு எடுத்து வரும் முயற்சிகளை நிதிநிலை அறிக்கை முற்றாக நிராகரித்து, புறக்கணித்துள்ளது. அரசியல் காரணங்களை மனதில் கொண்டு தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆயிரக்கணக்கான பெரும் நிறுவனங்களிடம் சுமார் ரூ.20 லட்சம் கோடி வரை வசூலிக்கப்படாமல் விடப்பட்ட பெரும் தொகை குறித்து நிதிநிலை அறிக்கை மூச்சு கூட விடவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் மூலம், ஊரகப்பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ரூ.4.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதை நிதி நிலை அறிக்கை கருத்தில் கொள்ளாமல் வெறும் ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டது. இந்த இயற்கை பேரிடர் இழப்புகளை ஈடு செய்ய தேசிய பேரிடர் நிதியுதவி கேட்டு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை நிதி நிலை அறிக்கையும் ஏமாற்றிவிட்டது.

புதிய ரயில் திட்டங்கள், இரட்டை வழி ரயில்பாதை அமைப்பு, ரயில் பாதை மின்மயமாக்கல், மெட்ரோ ரயில் விரிவாக்கம், மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்படி எல்லா வழிகளிலும் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் மக்கள் விரோத பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here